அ.தி.மு.க. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி உள்பட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி சென்ற நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அரசு எதிராக வாக்களித்தாக கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால், தங்கள் அணிக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டது, டெல்லியிலும் எங்கள் அணிக்குத்தான் செல்வாக்கு உள்ளது. டெல்லிக்கு எடப்பாடி சென்றுள்ளாரே தவிர, அவர் பிரதமரை சந்தித்து பேச முடியாது. தினகரன் - திவாகரன் மோதல் வீதிக்கு வந்துவிட்டதால் நாம் இனி விழிப்புடன் இருந்து தொண்டர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கிய அவசர ஆலோசனை கூட்டம் இரவு 10 மணி வரை என 3½ மணி நேரம் நடந்தது அதிமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எத்தகைய வாதத்தை முன்னெடுத்து வைப்பது?, விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
டி.டி.வி.தினகரன் மற்றும் திவாகரன் இடையே நிலவி வரும் உச்சக்கட்ட மோதல், கர்நாடக தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டுறவு சங்க தேர்தல், மாவட்ட அளவில் அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.