தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காகத் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் குமுளியில் உள்ள தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குப் படகில் சென்று மெயின் அணையையும் பேபி அணையையும் மற்றும் அணையிலிருந்து கேரளாவுக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மீண்டும் அதே தேக்கடிக்கு வந்தனர்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ''நான் இந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்துள்ளேன். பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தேன். கரோனா காலம் என்பதால் உடனடியாக ஆய்வுப் பணியைத் தொடங்க முடியவில்லை. தற்போது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக ஆழியாறு உள்ளிட்ட அணைகளைப் பார்வையிட உள்ளேன். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் விதியைக் கொண்டு வந்துள்ளது. அதற்குப் பெயர் 'ரூல் கர்வ்' அந்த விதிப்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது. எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது என்பதைக் கணக்கெடுத்துள்ளனர். அந்த க் கணக்கெடுப்பின்படி அணையின் நீர்மட்டம் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுத்துள்ளனர். அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலவரப்படி 139.50 அடி நீர்மட்டம் வைக்க அனுமதி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 30 ஆம் தேதி 142 உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ல் அணை பலவீனமாக இருக்கிறது. பலப்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. 152 உயர்த்த வேண்டும் என கோட்டுக்குச் சென்றோம். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 நீர்மட்டம் நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. அந்தப் பேபி அணையைப் பார்வையிட்டேன். அதில் என்னப் பிரச்சனை என்றால் அந்த அணை கீழே 3 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசைக் கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கிறனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுகக் கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றி விட்டால் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி நீர்மட்டம் உயர்த்தி விடலாம். அணையிலிருந்து தமிழகத்திற்குக் கூடுதலாகத் தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு குறித்துப் பேசுவதற்கு ஒபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். பத்து ஆண்டுக்காலத்தில் அந்தத் துறையின் அமைச்சர்கள் ஒருவராவது இந்த அணையை வந்து பார்வையிட்டுள்ளனரா? நான் இந்த 80 வயதில் தட்டுதடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். ஈபிஎஸ் ஆவது சேலத்துக்காரர், ஓபிஎஸ் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநில அமைச்சர்கள் அந்யோநியாமாக இருந்தால் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன் சென்ற வந்த போட்டில் தான் இன்றும் ஆய்வு செய்து வந்தேன். நல்லகாலம் வழியில் அந்த போட் நிற்கவில்லை. ஆய்வின்போது கூறினேன். தமிழக சார்பில் அதிவேக படகுகள் வாங்கி விட வேண்டும் என்றேன். 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக முடியவில்லை. நாங்கள் வந்து 6 மாதங்கள் தான் ஆனால் அனுமதி பெற்றுவிடுவோம். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் நேர்மையான சுமூகமான அமைச்சர். அவர் காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும்'' என்று கூறினார்.