சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து உரிய அனுமதிப் பெறாமல் நடத்தப்படும் சிலந்தி ஆற்றின் தடுப்பணைக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இதனைத் தானாக முன்வந்து பதிவு செய்து விசாரித்தது. அப்பொழுது கேரள அரசு 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவில்லை. உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீரைப் பூர்த்தி செய்வதற்கான கலிங்கு அமைக்கப்பட்டு வருகிறது' எனக் கூறப்பட்டது. இதைக்கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் 'எந்தக் கட்டுமான பணிகள்மேற்கொள்ளதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உரிய அனுமதிகளை பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதிப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கேரளா அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் உடுமலையிலிருந்து கேரளாவின் மூணாறு செல்லும் சோதனை சாவடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அமராவதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவது தமிழக நீர் வளத்தை பாதிக்கும். வறட்சி காலத்தில் இது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.