ரேஷன் கடைகளில், தரமற்ற மற்றும் தரம் குறைந்த அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தை கிடங்குகளிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.
ரேஷன் கடைகளில் தரம் குறைந்த அரிசியை கண்டறியப்படும்போது, பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப ஏதுவாக தனியாக வைக்க வேண்டும். வரும் காலங்களில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமற்ற அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது தெரியவந்தால் அதற்கு கடை பணியாளர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
சில மாவட்டங்களில், ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் துவரம் பருப்பு நுகர்வோர் கைகளில் கிடைக்கும்போது தரமற்று உள்ளதாக புகார் பெறப்பட்டு உள்ளன. அதனால், கொள்முதல் செய்யப்படும் இடத்தில் இருந்து நுகர்வோருக்கு கிடைப்பது வரை அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், துவரம் பருப்பு உள்ளிட்ட சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருள்கள் தரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல், விநியோகிக்கப்படும் பொருள்களில் எடை குறைவாக ஒருபோதும் விநியோகிக்கக் கூடாது. தரமான பொருள்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.