சென்னை, அசோக்நகர் 19 ஆவது தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (29/12/2021) காலை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தொற்று அதிகரிப்பால் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மூன்று இடங்களில் தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளன.
சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை கரோனா அதிகரித்து வருவதை அடுத்து இன்று (29/12/2021) முதல் 25,000 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 2- ஆம் தேதி அன்று 17- வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னை பெருநகரில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட நகரமாக சென்னை மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 'ஒமிக்ரான்' தொற்றுக்கு தண்டையார்பேட்டை- 300, மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கத்தில் தலா 100 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 129 பேருக்கு எஸ்.ஜீன் வகை தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் தொற்று உறுதியாவோருக்கு, அறிகுறியற்ற கரோனா பாதிப்பே உறுதியாகிறது. ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 45 பேருமே இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் என்பதால், குறைவான பாதிப்பே உள்ளது. இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள் திறப்பில் கட்டுப்பாடு உள்ளிட்டவைக் குறித்து டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும். வரும் ஜனவரி 3- ஆம் தேதி அன்று சிறார்களுக்கு தடுப்பூசிப் போடும் பணியை போரூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்." இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.