ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புகிறோம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (03/11/2020) விசாரணைக்கு வந்தபோது, 'ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஜூலையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ன நிலையில் உள்ளது? ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா? ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் பறிபோகும் நிலையில் விரைவாக நடவடிக்கை எடுப்பது அவசியம்' என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் ரம்மியில் இந்திய அளவில் ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி புழங்குகிறது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக 10 நாட்கள் கால அவகாசம் தேவை. தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி பிரச்சனையை அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதனையேற்ற நீதிபதிகள், ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரியது பற்றி நவம்பர் 19- ஆம் தேதிக்குள் மத்திய, மாநில பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.