ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகளிடமே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் மகன் சுரேஷ். வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த சுரேஷ், வீட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். நாளடைவில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகிவிட்ட சுரேஷ், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளார்.
வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை ரம்மியில் இழந்த வேதனையில் 'bye bye, Miss you Rummy' என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது முதன்முறை அல்ல. ஏராளமான சம்பவங்கள் இதுபோன்று நடந்து வரும் நிலையில், மக்களவையில் ஆன்லைன் ரம்மி தொடர்பாக, கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடமே இருப்பதாக தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடமளிக்கும் இணைய தளங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அதேநேரம், ஆன்லைன் சூதாட்டங்களைக் கண்டுபிடிப்பது, தடுப்பது ஆகிய பொறுப்புகள் மாநில அரசுகளுக்கே இருப்பதாக விளக்கம் அளித்தார்.