கோவை மாவட்டம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது 55). இவரின் மனைவி நாகலட்சுமி (வயது 50). இத்தம்பதிக்கு மதன்குமார் (வயது 25) என்ற மகன் உள்ளார். இவர் பி.எஸ்சி. ஐ.டி பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், சரியான வேலை ஏதும் கிடைக்காததால், வீட்டில் இருக்கும்போது செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். தொடர்ந்து இவ்வாறு தினமும் பல மணி நேரங்கள் விளையாடியதால், இதன் மூலம் நிறைய பணத்தை இழந்ததுடன் கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் இவரின் தாயார் ஆன்லைன் விளையாட்டை விளையாடக் கூடாது என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மதன்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதன்குமார் எழுதிய கடிதத்தில், "நான் ஆன்லைன் விளையாட்டினை தீவிரமாக விளையாடி வருகிறேன். இதனால் என் கண்பார்வை குறைந்துவிட்டது. தீராத தலைவலியால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. என்னால் வாழ முடியவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருப்பதைக் கண்டு நாகலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது மதன்குமார் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன் மகனுக்கு சரியாக எந்த வேலையும் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மகனின் செலவிற்கும் கூடுதலாக பணம் தேவைப்படும் என்பதால் தாய் நாகலட்சுமி இரவு பகல் பாராது காலையில் அங்கன்வாடி மையத்தில் சமையலாளராகவும், இரவில் மருத்துவமனை ஒன்றில் தூய்மைக் காவலராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.