Skip to main content

5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் பாடத்திட்டத்தை நிறுத்த வேண்டும்: சு.திருநாவுக்கரசர்!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
Su. Thirunavukkarasar


5-ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்த வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர்.
 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பாதிப்பாலும் பிரச்சனையாலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் சிறு குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது சரியல்ல, அவசியமும் இல்லை என பொதுவாக பலராலும் கருதப்படுகிறது. இது சுமார் இரண்டரை மணி நேரம் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களுக்குக் கேட்டினையும், மனதிற்கு உளச்சலையும் தரக் கூடியது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது சங்கடத்தையும், சிரமத்தையும் மன உளைச்சலையும் தரக் கூடியது.

எல்லா வீடுகளிலும் இணையத்தள வசதியோ, கணினியோ, மடி கணினியோ, தொடுதிரை கைப்பேசியோ இருப்பதில்லை. மேற்கண்ட வசதிகள் உள்ள குடும்பங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்குச் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடங்களைச் சொல்லித்தர இயலும்.  
 


சரியான கல்வியாளர்களின் ஆய்விற்குப் பிறகே கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான ஆன்லைன் பாட முறை கைவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் தவிர தனியார்ப் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் சொல்லித் தருவதைக் காரணம் காட்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கேட்டு பெற்றோர்களின் சிரமமான இச்சூழ்நிலையில் வற்புறுத்துவதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது.

எனவே 5-ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்திட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து முதலமைச்சரும், கல்வி அமைச்சரும், கல்வித் துறை அதிகாரிகளும், கல்வியாளர்கள், நிபுனர்கள், மனோதத்துவ விற்பன்னர்கள் ஆகியோரை அழைத்து, அவர்களின் கருத்தறிந்து மேற்கண்ட எனது வேண்டுகோளை அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்