கரோனா ஊரடங்கை சாதகமாக்கிக்கொண்டு கதிராமங்கலத்தில் குழாய் பதிக்கும் பணியை துவங்கியிருக்கிறது ஓ.என்.ஜி.சி. அந்த பணிகளை பார்க்க சென்றவர்கள் மீது, ஊரடங்கை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு, 6 பேரை கைது செய்து விடுவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக நடந்த போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. ஒட்டுமொத்த கிராமமும் வருடக்கணக்கில் போராடியது. பலபேர் மீது வழக்குப்பதியபட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கரோனா ஊரடங்கால் போராட்டத்தை சற்று கைவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், கதிராமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் இரும்பு குழாயில் பழுதடைந்த குழாய்களை மாற்றி அமைப்பதற்காக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பணியை துவங்கினர். அதனை கேள்விப்பட்டு பார்வையிடுவதற்காக கடை வீதிக்கு வந்த கதிராமங்கலம் போராட்ட குழுவை சேர்ந்த திமுக கிளை செயலாளர் ராஜு மற்றும் ராஜாராமன், கஸ்தூரி தேவேந்திரன் மகேஸ்வரி, கலையரசி ஆகியோரை ஊரடங்கைமீறி ஒன்று கூடியதாக போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது.
"ஓ.என்.ஜி.சி. குழாய்களை மாற்ற வேண்டியது மிக அவசியமான ஒன்று. பழுதான குழாய்கள் தொடர்ந்து இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி குழாய்கள் மாற்றுகிறோம்" என்கிறார்கள் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்.
போராட்டக்களத்தில் இருப்பவர்களோ, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை துவங்கியதே அந்த இடத்தினாலதான். மீண்டும் அங்கு போலிஸ் பாதுகாப்போடு ஊரடங்கு காலத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ராட்சத குழாய்களை பதிப்பது என்ன நியாயம், நாங்கள் கூட்டமாககூட போகவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கத்தான் தனித்தனியாக போனோம். ஏதோ நாங்க பெரும் குற்றம் செய்துவிட்டதாகவும், ஊரடங்கை மீறிவிட்டதாகவும் கைது செய்யுறாங்க" என்கிறார்கள் ஆத்திரம் பொங்க.
ஆறு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று, இரவு ஆனதும் விடுவித்தனர். இதற்கிடையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இன்று 4ஆம் தேதி குழாய்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது.
"ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு, ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவாக காவல்துறை மீண்டும் அடாவடியை கட்டவிழ்க்க நினைக்கிறது" என பொதுமக்கள் வேதனை படுகின்றனர்.