ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் கடுமையாகச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம் பெண், காதலிக்க மறுத்ததால் அதே துணிக்கடையில் முன்பு பணியாற்றிய ரவீந்திரன் என்பவரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் இத்தகைய வெறிச்செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மெர்சியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேலிமலை கிராமத்தைச் சேர்ந்த மெர்சி என்பவர் வள்ளியூரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்தார். அந்தக் கடைக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் பணிக்கு சென்று வந்துள்ளார். அதே கடையில் பணியாற்றிய ரவீந்திரன் என்ற இளைஞருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் ரவீந்திரன் அந்தக் கடையிலிருந்து விலகி வேறு வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார். எனினும், மெர்சியை அவர் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், அதை மெர்சி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்நாள் மாலை பணி முடித்து வீடு திரும்பிய மெர்சியை சாலையில் வழி மறித்த ரவீந்திரன் தம்மை காதலிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மெர்சி ஒப்புக்கொள்ளாததால் அவரை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
படுகொலை செய்யப்படும் அளவுக்கு மெர்சி எந்தக் குற்றத்தையும், பாவத்தையும் இழைக்கவில்லை. ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக விடுதியில் தங்கி பணியாற்றி வந்த அவர், எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக சுற்றி வந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்தது மட்டும் பெரும் பாவமாகி இருக்கிறது. இத்தகைய கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் தங்களின் பெண்களை படிக்கவோ, பணிக்கோ அனுப்பத் தயங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘‘பெண்களுக்கென்று எந்த விருப்பமும் இருக்கக்கூடாது. அவர்களிடம் காதலைச் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள். கொடூரமான படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள்’’ என்ற மனநோய் அண்மைக்காலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி தம்மை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவரை அழகேசன் என்ற இளைஞர் கல்லூரி வாசலிலேயே கொடூரமாக கொலை செய்த நிகழ்வு அப்போது தமிழகத்தையே உலுக்கியது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ.பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா, கோவை தன்யா என முப்பதுக்கும் அதிகமான இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை காதில் வாங்க பினாமி அரசு மறுக்கிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு பெண்கள் செல்லும் வழியில் கூடி நின்று, அருவருக்கத் தக்க வகையிலான செய்கைகளை செய்தல், பேருந்துகளில் தொல்லை கொடுத்தல் என்று பெண்களுக்கு எதிராக, பெண்களை மதிக்கத்தெரியாத கும்பல் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இது பெண்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் ஆபத்தாகும்.
எனவே, ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் கடுமையாகச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதேபோன்று, பெண்களுக்கு எதிரான சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபடும் கும்பல்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.