தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகை காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது நகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. அப்போது மாணவ, மாணவிகளிடையே யார் அதிக மாத்திரை சாப்பிடுவது என போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எட்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளும், 7 மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களும் ஊட்டச்சத்து மாத்திரையை சக்லேட் சாப்பிடுவதை போன்று கடித்து சாப்பிட்டுள்ளனர்.
இதனால் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் 30 க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் 6 பேரும் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை உதகை மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மாணவி 4 பேரின் உடல்நிலை மோசமானதால் கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடலை நிலை மிகவும் மோசமானதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வந்தனர். ஆனால் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் உடல நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளியின் தலைமையாசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று ஆசிரியை கலைவாணி பள்ளிக்கு வரவில்லை, விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.