Skip to main content

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

One passed away, 9 injured in Cuddalore firecracker factory explosion

 

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (48). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார்புரம் தென்னந்தோப்பில் 'கோசலை ஃபயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில், கூரை கொட்டகையில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இங்கு நாட்டுவெடி, வானவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்படுகின்றன.

 

இந்நிலையில், புதுச்சேரி மாநில மற்றும் கடலூர் மாவட்ட கடற்கரையோரங்களில் மாசிமகத் திருவிழா இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். நாளை இரவு தெப்பஉற்சவம் நடக்கும். அப்போது நாட்டுவெடி, வானவெடிகள் வெடிப்பது வழக்கம். இந்த திருவிழாவுக்காக நாட்டுவெடிகளை ஆர்டர் எடுத்து தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்துள்ளனர்.

 

அப்போது நேற்று மாலை 4.15 மணியளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. தொடர்ந்து வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் பற்றி எரிந்தது. வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதனைப் பார்த்த மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அணைக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

 

இந்த தீ விபத்தில் மணவெளியை சேர்ந்த பூபாலன் மனைவி மல்லிகா(60) என்பவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார். மேலும், அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா(34), காசான்திட்டு ராஜ்குமார் மனைவி மலர்க்கொடி(35), சிவநாதபுரம் சங்கர் மகன் சக்திதாசன்(25), ஓடவள்ளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி(41), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி(35), பாக்கம் கூட்ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா(18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி(19), லட்சுமி (25) மற்றும் பட்டாசு குடோன் உரிமையாளரான சேகர் மனைவி கோசலை  ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் மலர்கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

One passed away, 9 injured in Cuddalore firecracker factory explosion
சேகர் - அவரது மனைவி கோசலா

 

இந்த விபத்து தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர்(55), அவரது மனைவி கோசலை(50) ஆகிய இருவரையும் ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே வெடிவிபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். அதே சமயம் வெடிவிபத்தில் இறந்த மல்லிகா குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்