இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் XE குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒமைக்ரான் XE பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மார்ச் மாதத்தை பொறுத்தவரை நாம் அனுப்பிய அனைத்து சாம்பிளும் ஒமைக்ரான் என்று உறுதி செய்யப்பட்ட போதிலும் அதில் பிஏ 2 என்ற வேரியண்ட் 92 விழுக்காடு காணப்பட்டது. இதனை கிளீனிக்களாக பார்க்கும் பொழுது யாருக்கும் எந்தவிதமான தீவிர பாதிப்பும் இல்லை என்பதுதான் நல்ல செய்தி. அதேநேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வைரஸ் என்றாலே உருமாறுவது வழக்கம்'' என்றார்.