தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ், 77க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 60க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, இரண்டு, மூன்று நாட்களாக தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, ராஜஸ்தானில் 10க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.