ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வல்லவாரி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). அதே ஊரில் உள்ள கடைவீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு மஞ்சக்கரையை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பாரில் மது குடித்துவிட்டு போதையில் சாப்பிட வந்த அதே பகுதியில் உள்ள பேக்கரி மாஸ்டர் ஜான் (எ) கிறிஸ்டோபர் ஆம்லெட் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அதில் உப்பு குறைவாக இருந்ததாக வாயத்தகராறு ஏற்பட்டது. இதில் பரோட்டா மாஸ்டரும், கடை முதலாளியும் ஜானை தாக்கியதாக கூறப்படுகிறது.
பரோட்டா கடையில் அடி வாங்கிய ஜான் 2 நாட்களாக வீட்டிற்கும் செல்லாமல், கடைக்கு வேலைக்கும் செல்லாமல் தனது உறவினர்களிடம் தன்னை ஒரு ஹோட்டலில் அடித்துவிட்டனர் என்று கூறியதுடன் தனது தம்பி டேவிட்க்கும் போன் செய்து இதனை கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தனது தம்பியுடன் அதே ஹோட்டலுக்குச் சென்று ஆம்லெட் மற்றும் கொத்துப் பரோட்டா கேட்டுவிட்டு காத்திருந்தவர்கள், பரோட்டா மாஸ்டர் சுரேஷ் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்த போது அவரது தலையில் பீர் பாட்டிலால் தாக்கியதுடன் அங்கு வந்த ஜானின் உறவினரான பட்டுக்கோட்டை விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் அஜித்குமார், ஜான் மில்டன், கார்த்திக், அஜித் உட்பட 8 பேர் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் சுரேஷ், கடை முதலாளி ஞானசேகரன் ஆகியோரை அடித்து உதைத்து பலமாக தாக்கி கடையையும் உடைத்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆயிங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் டிரைவரான பிரபு (24) சண்டையை விலக்கிவிட சென்று ஒதுக்கிவிட்ட போது மது போதையில் இருந்த ஜானுடன் வந்திருந்தவர்கள் பிரபுவையும் சரமாரியாக தாக்கி கீழே தள்ளி முகம் மற்றும் நெஞ்சில் கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் காயமடைந்து கிடந்த பிரபு மற்றும் ஞானசேகரன், சுரேஷ் ஆகியோரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓட்டுநர் பிரபு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்மந்தமில்லாமல் பிரபுவை தாக்கிக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பரிதாபமாக உயிரிழந்த பிரபு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். கொலை செய்துவிட்டு பட்டுக்கோட்டையில் பதுங்கி இருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்லேட்டில் உப்பு இல்லை என்பதால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.