தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் விற்ற பணத்தையும் ஆனந்தகுமார் என்பவரது கடையில் கைப்பற்றிய அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசார், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமாரின் தந்தை ஆத்தியப்பன், போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தார்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பொருட்களை சாலையில் போட்டு பேருந்தை போகவிடாமல் மறித்தார். சார்பு ஆய்வாளரிடம் ஆத்தியப்பன் “நான் கொடுத்ததெல்லாம் வரட்டும். எல்லாரும் (மாமூல்) வாங்குனீங்க. பத்து வருஷமா கொடுத்துட்டு இருக்கேன். இந்த வார்த்தைய எங்கிட்ட பேசாதீர்கள். உனக்கு நான் இளையவனா?” என்று ஒருமையில் வாக்குவாதம் செய்தார். அதற்கு அந்த சார்பு ஆய்வாளர் “உன் கடையில நான் வாழைப்பழம் கூட வாங்கி சாப்பிட்டதில்லை...” என்று கூலாகச் சொன்னதும் ஆத்தியப்பன் வைத்திருந்த அரிவாள் பிடுங்கப்பட்டு சார்பு ஆய்வாளர் கைக்கு மாறியதும் கைபேசி கேமராவில் எடுத்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.