ஈரோடு காளிங்கராயன்பாளையம் சக்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் குமாரசாமியின் தாய் சரஸ்வதி (70) இவர்களுடன் வசித்து வந்தார். சுமதி தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் நாமகிரிப்பேட்டையில் வேளாண்மை உதவி இயக்குநராக பணிபுரிந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். குமாரசாமி பவானி வேளாண்மை உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் குமாரசாமிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். மகன் குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லாததிலிருந்தே சரஸ்வதி மன வேதனையுடன் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரஸ்வதி திடீரென வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். பின்னர் உறவினர் வீட்டிலிருந்த அவரை சுமதி சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை சரஸ்வதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடிய போது அதே பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி உடலைக் கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது மகனின் உடல்நிலை சரியில்லாததால் அந்த துக்கம் தாங்காமல் சரஸ்வதி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.