சென்னை அடுத்த செங்கல்பட்டில் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஓலா கால் டாக்ஸி புக் செய்த வாடிக்கையாளர்களே ஓட்டுநரைக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த சோளிங்கநல்லூர் அரசன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். அர்ஜுன் 'ஓலா' எனும் பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஓலாவில் கால் டாக்ஸி புக் செய்த வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது டாக்ஸியில் வந்த 3 பேர் அர்ஜுனைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரின் காரை திருடிச் சென்றனர். சாலையின் ஓரமாக கிடந்த அர்ஜுனின் உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில் மேல்மருவத்தூர் மேம்பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரையும் கைப்பற்றினர்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இரவு நேரத்தில் ஓலா செயலில் டாக்ஸி புக் செய்த நம்பர்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தபொழுது இந்த கொலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த பிரசாத், அந்த பணி பிடிக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பழக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து திருமூர்த்தி, கட்டிமுத்து ஆகிய இரண்டு நண்பர்கள் பிரசாத்தை தேடி கோயம்பேடு வந்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து விழுப்புரம் அருகே பாதுகாப்பில்லாமல் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். அதனைத் தொடர்ந்து கோயம்பேட்டில் கால் டாக்ஸி ஒன்றை புக் செய்து அங்கிருந்து தாம்பரம் மெப்ஸ் வரை சென்றுள்ளனர். அந்த காரில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் கார் மெதுவாகச் சென்றுள்ளது. இதனால் அந்த டாக்ஸியிலிருந்து இறங்கி ஓலா செயலியில் காரை புக் செய்தனர். அப்பொழுது இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அர்ஜுன் தனது காருடன் அங்கு வந்து மூன்றுபேரையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடிப்பது தற்பொழுது முடியாது எனத் தீர்மானித்த மூவரும் காரை திருடிவிடலாம் என முடிவெடுத்து ஓட்டுநர் அர்ஜுனைக் காரை விட்டு இறங்கிச் செல்லுமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டதால் அர்ஜுனின் கழுத்தை அறுத்து வெளியே தள்ளிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மூவரும் தப்பித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் மூன்று பேரும் காரை மேல்மருவத்தூர் பாலத்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அதன்பிறகு பேருந்து ஏறி சொந்த ஊருக்கும் சென்று விட்ட நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சிறிது தூரம் ரத்தம் சொட்டச் சொட்ட நடந்துவந்த ஓட்டுநர் அர்ஜுன் ஒருகட்டத்தில் நடக்க முடியாமல் உயிரிழந்து சாலையில் கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.