சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் 10வது மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவு தயாரித்து மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.
இந்தப் பணியை செய்துவரும் வருவாய்த்துறை அதிகாரி நாகேந்திரன் கூறும்போது, “காலை பொங்கல், சாம்பார், மதியம் சாம்பார் சாதம், மாலை புளி சாதமும் தயாரித்து மக்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று கொடுத்துவருகிறோம். 142 வார்டுகளில் வசிக்கும் 12,000 மக்களுக்கும் மூன்று வேளை சாப்பாட்டை வீட்டிற்கே சென்று கொடுத்துவருகிறோம். வருவாய்த்துறையில் பணிபுரிந்துவரும் 21க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியை மேற்கொண்டுவருகிறோம்” என தெரிவித்தார்.