கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அது மாவட்ட கரோனா வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோன வைரஸ் தொற்று உள்ளவர்கள் அனைவரும் இங்குள்ள கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் இங்கு தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ள 20 பேருக்கும் இந்த சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழன் அன்று இந்த கரோனா சிறப்பு வார்டை, மண்டல கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியும் தமிழக தேர்தல் ஆணையருமான எல். சுப்பிரமணியன் தலைமையில், கூடுதல் காவல்துறை இயக்குனர் வினித்தேவ் வான்கடே, விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் டிஎஸ்பி கார்திகேயன் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவ அலுவலரிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் குறித்தும் கேட்டறிந்தனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.