காவி்ரி மேலாண்மைக்காக போராடிக்கொண்டிருக்கிற இந்த நிலையில் தமிழக அரசு மணல் குவாரிகள் அமைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிலையை பயன்படுத்தி திருச்சியில் காவிரி கரையோர பகுதிகளில் கல்லணை கால்வாய்களில் சட்ட விரோதமாக தொடர்ந்து மணல் எடுத்துக்கொண்டே இருப்பதாகவும், இதற்கு அந்த பகுதி அதிகாரிகள் ஆசியோடு தான் நடக்கிறது என்றும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக்காக திருச்சி கலெக்டர் ராஜாமணி வந்தார். அப்போது ஒன்றிய அலுவலகத்தின் மூலம் திருவெறும்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர் பாரத பிரதம மந்திரியின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் அரசங்குடி ஊராட்சி முடுக்குப்பட்டியிலிருந்து கிளியூர் வரை 6 கிமீ சாலை ரூ.2.30 கோடியில் புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கிளியூர் ஊராட்சி கீழவிழங்குளம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து செல்வதற்காக சாலையோரம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த அண்ணாநகர் பகுதி பொதுமக்களிடம் யார் அனுமதியில்லாமல் மணல் அள்ளினாலும் போலீசாரிடம் பிடித்து கொடுப்பதுடன் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விடுவோம் என சொல்லுங்கள். இதுவே கடைசி தடவை என்று எச்சரித்தார்.
பின்னர் தாசில்தார் ஷோபாவிடம் சாலையில் கொட்டப்பட்டுள்ள மணலை தினமும் லாரி வைத்து அள்ளுங்கள் என உத்தரவிட்டார். கிளியூர் அருகே வலதுபுறம் உள்ள வெண்ணாற்றில் மணல் திருட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்டு மாட்டு வண்டிகள் வெண்ணாற்றில் இறங்கும் பாதையில் உடனடியாக கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அப்போது இவ்வளவு மணல்கொள்ளை நடப்பதை எப்படி தடுக்காமல் இருந்தீர்கள் என்று தாசில்தாரிடம் கேட்டார். அதற்கு அவர், மணல் எடுப்பதை தடுத்தால் மணல் கொள்ளையர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என கதறினார். அதற்கு கலெக்டர் தினமும் இந்தப் பகுதியில் கூடுதல் ஆட்களை வைத்து ரெய்டு நடத்துங்கள் என்றார்.
மேலும் கிளியூரில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமாக உள்ளவர்கள் என 100 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய சொல்லுங்கள். பி்டிபடும் மணல் வண்டிகள் அனைத்தையும் எனது உத்தரவில்லாமல் விடுவிக்காதீர்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இங்கு எடுக்கப்படும் மணல் எந்த வழியாக வெளியில் போகிறதோ அந்த வழியில் உடனடியாக தடுப்பை ஏற்படுத்துங்கள் என்றார்.