இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளோம், எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி, தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி, பிரதமர் மோடிக்கு, என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என கடிதம் அனுப்பிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். கடந்த 28ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பதை சிறைத்துறை அனுமதித்துள்ளது. தினமும் அவரது உடல்நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிவருகிறது. டிசம்பர் 2ந்தேதியோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, டிசம்பர் 2ந்தேதி இன்று வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனை, வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து ஆஜர்படுத்தியது காவல்துறை. முருகன் சிறையில் விதிகளை மீறி செல்போன் வைத்திருந்ததை கடந்த அக்டோபர் மாதம் கைப்பற்றிய சிறைத்துறை அதிகாரிகள், அதுதொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் 15 தினங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.