கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள குச்சிபாளையத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி - சென்னை சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த நிலையில் அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின்படி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவன நிர்வாகிகளின் லீலைகள் அம்பலமானது.
பண்ருட்டி - சென்னை சாலையில் உள்ளது மூன்றெழுத்துக் கொண்ட தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனம். இங்கு பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் செவிலியர் பயிற்சியினைப் பெற்று வருகின்றனர். இந்நிறுவனத்தைக் கடலூர் வண்ணாரபாளையத்தைச் சேர்ந்த டேவிட் அசோக்குமார்(39) என்பவர் நடத்தி வருகிறார்.
பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த நிஷா பர்கத் பீவி(32) மேலாளராகவும், நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன்(32) பயிற்சி ஆசிரியராகவும், விழுப்புரம் அடுத்த காணையைச் சேர்ந்த பிரேம்குமார் அலுவலக ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 4 பேரும் திட்டம் போட்டு பாதிக்கப்பட்டுள்ள மாணவி உள்பட 3 மாணவிகளை ஆசைவார்த்தைகள் கூறி கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி ஏற்காட்டுக்கு "கேம்ப்" (மருத்துவ முகாம்) போவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மாணவிகளைத் தனியறையில் தங்க வைத்து, மது கொடுத்து மது போதையில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ள்னர்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி மீண்டும் கேம்ப் எனக் கூறி, மருத்துவ முகாமிற்காக மீண்டும் ஏற்காடு செல்ல தாளாளர் ஏற்பாடு செய்துள்ளதாக மேலாளர் நிஷா அழைத்துள்ளார். இதில் விருப்பம் இல்லாததால் அந்த மாணவி கடந்த 12-ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தற்கொலைக்கு முயன்ற மாணவி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் அன்பழகன், உடந்தையாக இருந்த மேலாளர் நிஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவான தாளாளர் டேவிட் அசோக்குமார், அலுவலக ஊழியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நின்றிருந்த அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.