திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆறு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அங்கு பணியாற்றிய செவிலியர்கள் செல்போனில் மூழ்கி அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை இறந்ததாக குழந்தையின் பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசியை சேர்ந்த இப்ராஹீம்-மூசா - சபீனா தம்பதியினரின் ஆறு மாத ஆண் குழந்தை முகமது ரசூல் சளி, காய்ச்சல் காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் தரப்பில் எடுத்துக் கூறியும், மருத்துவர்களும் செவிலியர்களும் செல்போனில் மூழ்கியபடி அலட்சியமாக இருந்தால் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய், ''இனியும் இந்த மருத்துவமனையில் ஆபத்து ஏற்படாமல் இருக்க நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். எங்கள் குழந்தையோடு முடிஞ்சு போச்சு சார். இதோடு எந்த குழந்தைகளுக்கும் இனி உயிர் போகக்கூடாது. உடனுக்குடனே பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அசால்டாக இருக்கக் கூடாது. அசால்டாக விட்டதால் தான் சார் குழந்தை அநியாயமாக போய்விட்டது'' எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.