முன்னாள் முதல்வர் கலைஞரின் மகள் செல்வி மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும்படி பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சென்னை தாளம்பூரில், முன்னாள் முதல்வர் கலைஞரின் மகள் செல்விக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர், 5.14 கோடி ரூபாய்க்கு விலை பேசி, 3.50 கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், நிலத்தை நெடுமாறனுக்கு கிரயம் செய்து வைக்காமல் வேறு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
நிலத்திற்கு கொடுக்கப்பட்ட தொகையை திருப்பிக் கேட்ட நெடுமாறனை, தாக்கியும் மிரட்டியுள்ளனர்.
இதுசம்பந்தமாக நெடுமாறன் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவினர், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நெடுமாறன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி செல்விக்கு உத்தரவிட்டது.
ஆனால், அரசியல் செல்வாக்குமிக்க இவர்கள் இருவரும் விசாரணையை இழுத்தடித்து வருவதாகக் கூறி, வழக்கை விரைந்து முடிக்கும்படி பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க கோரி செல்வியும், ஜோதிமணியும் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், விசாரணையை மார்ச் 21க்கு ஒத்திவைத்தார்.