நடிகர் சங்கம் சார்பில் காமாரஜர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞருக்கான நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ரஜினிகாந்த் இக்கூட்டத்தில் பேசியபோது, ‘’கலைஞரின் இறுதிச்சடங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்தார்கள். முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள். அதில் ஒரே ஒரு குறை. இந்த இடத்தில் அதை சொல்லலாமா? வேண்டாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். இறுதிச்சடங்கில் கவர்னர் முதல் ராகுல்காந்தி வரை பலரும் இரண்டு மணி நேரம் காத்திருந்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் அங்கே வரவேண்டாமா? மந்திரி சபையே மொத்தமாக அங்கே திரண்டு வந்திருக்க வேண்டாமா? இதைப்பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் எல்லாம் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? ஜாம்பவான்கள் மோதினாங்க. அது போச்சு. இப்போது அது வேண்டாம். எதிர்க்கட்சிகள் அவ்வளவுதான். மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுத்தது தொடர்பாக மேல்முறையீடுக்கு தமிழக அரசு போயிருந்தால் நானே போராடியிருப்பேன்.
கடைசியில் குழந்தை மாதிரி தளபதி கண்ணீர் விட்டது தாங்க முடியவில்லை. உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். ஆண்டவன் இருக்கிறான். தளபதியாரே கவலைப்பட வேண்டாம்’’என்று தெரிவித்தார்.