கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒன்பது வார்டுகள் உள்ள இக்கிராமத்தில் 2,900 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிகாரிகள் மூலம் ஒட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பட்டியலில் ஆறாவது வார்டு உறுப்பினராக ஆதிதிராவிட பெண்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆறாவது வார்டில் உள்ள மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த வார்டில் ஒரு ஆதிதிராவிட வாக்காளர் கூட இல்லை. வாக்காளரே இல்லாத நிலையில் வேட்பாளர் எப்படி போட்டியிட முடியும் என அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவ்வார்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போது தகவலறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் வருவாய் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப் பேச்சில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை அனைத்து நிலை பதவிகளுக்காக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வந்தனர். ஆனால் ஸ்ரீ நெடுஞ்சேரி 6-ஆவது வார்டு உறுப்பினருக்கு எவ்வித வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் குளறுபடியால், இக்கிராமத்தில் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதனை, தேர்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளின் அலட்சிய செயலால், 428 வாக்காளர்கள் கொண்ட தங்களின் வார்டு உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதாகவும், உள்ளாட்சி பிரதிநிதி இல்லாத நிலை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் இக்கிராமத்தின் ஆறாவது வார்டை, பொதுவாக வார்டாக அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.