மருத்துவ துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை, மத்திய, மாநில அரசுகள் உரிய விதத்தில் ஊக்குவிப்பதில்லை என்றும், போதிய நிதியை ஒதுக்குவதில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், பாதித்தவர்களை குணப்படுத்தவும் சித்த மற்றும் இந்திய மருத்துவத்தில் கண்டுபிடித்துள்ள மருந்தை சோதனை செய்ய அனுமதிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவமுறை மருத்துவர் மாதேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனாவை, அபி ஆஷிஷ் மருந்து மூலம் விரைவாக குணப்படுத்த முடியும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் முடியும் எனக் கண்டறிந்திருப்பதாகவும், இதனை அரசு அதிகாரிகள்முன் பரிசோதனைக்கு அனுமதிக்கக்கோரி தமிழக அரசிற்கு 4 கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, நாட்டில் மிகச் சிறந்த மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இருந்தாலும், மருத்துவத் துறையில் புதிய ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்புக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய ஊக்குவிப்புகளை அளிப்பதில்லை எனவும், இதற்காக போதிய நிதியை ஒதுக்குவதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
தடுப்பு மருந்துகளைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே, டெங்கு காய்ச்சல் பரவியபோது, அதற்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தற்போது இந்திய மருத்துவ முறையில் மருந்துகள் உள்ளனவா என்பதை ஏன் ஆய்வு செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
வழக்கில், மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.