திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் குறிப்பாக கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க ஜோலார்பேட்டை மார்கமாக செல்லும் ரயில்களில் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.
இந்த கண்காணிப்பில் ரயில்களில் தொடர்ச்சியாக பயணம் செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான தீப்ஜோதி, 26 வயதான சஞ்சுராய் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ரயிலில் கொள்ளையடிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை விசாரித்ததில், அதே மாநிலத்தை சேர்ந்த 23 வயதான கிஷோர், அமர்ஜோதிபோரா ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம்மிருந்து 11 சவரன் தங்க நகை, 9 செல்போன்கள், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.