அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை டவுன்ஷிப் வளாக குடியிருப்பு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 80 பவுன் நகைகளை திருடிச் சென்றது சம்பந்தமாக அரியலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 142/2022 u/s 457, 380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த திருட்டு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும், சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில் இச்சம்பவத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் சுந்தர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான், அப்துல்லா ஆகியோரின் உத்தரவின் பேரில் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு ஆய்வாளர்கள் சகாய அன்பரசு, அன்பழகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாலாஜி, நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் மேற்படி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும், அவர்கள் மீண்டும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் மீண்டும் வந்திருப்பது தெரியவந்தது.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலை பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (26.5.2022) காலை 11 மணியளவில் தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நான்காபெளரியா, காளியா, அமீர், சர்தார்ஹீரு ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சுமார் 80 சவரன் தங்க நகைகளை வீட்டை உடைத்து இரும்பு பயன்படுத்திய ராடுகள் திருடுவதற்கு கட்டிங் பிளையர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். அத்துடன் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி அனல்மின் ஊழியர் குடியிருப்பில் வீடுகளை உடைத்து திருடிய சுமார் மேலும் 350 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், புனே, போபால் குஜராத், கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல மாநிலங்களில் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் இன்று (26.5.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.