அண்மைக்காலமாக வடமாநிலத் தொழிலாளர் குறித்து தவறான செய்திகள் அதிகம் பரவுவதால் வடமாநிலத் தொழிலாளர் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறையும் அதோடு தொடர்புடைய மற்ற அனைத்து துறைகளும் இணைந்து தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி அபரிமிதமானது. உயர்கல்வியில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. சீருடைகள், புத்தகங்கள், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்றவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பான்மையான குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வரும் குழந்தை தொழிலாளர்களை தடுக்க அனைத்து துறைகளும் இணைந்து துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தவறான தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்திலும் தொழிலாளர் நலத்துறையின் தலைமை அலுவலகத்திலும் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை கணக்கெடுத்து அரசிடம் சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளோம். இதில் தொழிலாளர் நலத்துறை மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது” எனக் கூறினார்.