கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐஐடி மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி முன்பு இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் உதவி ஆணையர் சுதாகர் இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது காவல் ஆணையர் விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், கூடுதல் துணை ஆணையர் மெகலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, விடைத்தாள் மதிப்பெண் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.
அதில் 18 மதிப்பெண்களுக்கு பதிலாக 13 மதிப்பெண்கள் அளித்திருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், விடைத்தாளை ஆய்வு செய்ததில் பேராசிரியர் அளித்த மதிப்பெண்கள் சரியாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவலை ஆசிரியருக்கு மெயிலில் அனுப்பி விட்டேன் என பாத்திமா மன உளைச்சலில் இருந்ததாக அவரின் தோழி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.