Skip to main content

பெயரளவுக்கு நடந்த கிராம சபைக்கூட்டம்! அடுத்தமுறை முறையாக நடத்தப்படும் என சமாதானம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

gr


சேலம் அருகே கிராமசபைக்கூட்டத்தில் இருந்து அரசு சார்பில் வந்திருந்த ஊழியர் ஓட்டம் பிடித்ததால், கூட்டம் நடக்காமலேயே ரத்து செய்யப்பட்டது.


கிராமப்புறங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் ஆண்டுக்கு நான்கு முறை அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.  அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று (அக்டோபர் 2, 2018) கிராமசபைக்கூட்டம் நடந்தது. சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியில் கிராமசபைக் கூட்டம், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த ஆண்டின் கடைசி கூட்டம் என்பதால் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர் மக்களும் திரண்டு வந்திருந்தனர். 

 

g2

 

அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் வடிவேல் என்பவர் அக்கூட்டத்தில் அரசுப்பார்வையாளராக வந்திருந்தார். கூட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் குள்ளம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், முருகேசன், மணிகண்டன், வடிவேல் ஆகியோர் அவரிடம், தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் வசதி செய்து தருமாறு கடந்த கூட்டத்தின்போதே தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். ஆனால் இன்னும் அப்பிரச்னை தீரவில்லை. எப்போது தெருவிளக்கு வசதி செய்து தரப்படும்? என வடிவேலிடம் கேட்டுக் கொண்டிருந்தனர் காலை 10.45 மணியளவில் குள்ளம்பட்டி கிராம மக்கள்.  மேலும் சிலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் அரசுப் பார்வையாளர் வடிவேல் என்ன நினைத்தாரோ, திடீரென்று கூட்டத்தில் இருந்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் தீர்மான பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் கிராமசபைக் கூட்டம் பத்தே நிமிடங்களில் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த கூட்டத்தின்போதும் வடிவேல் இதேபோல்தான் தீர்மான பதிவேட்டை எடுத்துக்கொண்டு அடிக்கடி வெளிநடப்பு செய்ய முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

 

g3


பின்னர் காலை 11 மணியளவில், கால்நடைத்துறையில் இருந்து பெண் மருத்துவர், மின்வாரிய ஊழியர், ரேஷன் கடை ஊழியர் ஆகியோரும் அந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை 11 மணிக்குதான் கூட்டத்திற்கு வரும்படி தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறினர். மேலும், குள்ளம்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு இல்லாமல் மக்கள் இருளில் கிடப்பது குறித்து இதுவரை அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து மின்வாரிய அலுவலகத்திற்கு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை என்றும் அங்கு வந்த மின்வாரிய ஊழியர் கூறினார்.


பிறகுதான், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களைக் கொண்டு பெயரளவுக்கு கிராமசபைக் கூட்டத்தை நடத்திவிட்டு வடிவேல் ஓட்டம் பிடித்திருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதுவரை கிராமசபைக் கூட்டங்களில் கொண்டு வந்த தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாமல் பெயரளவுக்கு கூட்டம் நடத்தப்படுவதாகவும் கிராம மக்கள் சலிப்புடன் கூறினர்.


இது ஒருபுறம் இருக்க, ராமலிங்கபுரம் கிராமசபைக்கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசுப் பார்வையாளராக வந்திருந்த ஊழியர், இந்த திட்டத்துக்கு தற்போது உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தீர்மானம் பதிவு செய்ய முடியாது என்றார்.


அதற்கு அந்த ஊரைச் சேர்ந்த சிவகாமி, கவிதா மற்றும் கிராம மக்கள் சிலர், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ராமலிங்கபுரம் கிராமமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். எங்கள் ஊரில் கிராம மக்களே சேர்ந்து கட்டிய கோயிலும், பள்ளிக்கூடமும் அழிந்துவிடும். ஊர்மக்களை பிளவுபடுத்தும் இந்த திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். அதைப்பற்றி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். 


இதையடுத்து, அந்த தீர்மானத்தை பதிவேட்டில் அரசு பார்வையாளர் பதிவு செய்து கொண்டார். மேலும், தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் பிரச்னைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்தனர்.


இதற்கிடையே, குள்ளம்பட்டி கிராம மக்கள் இன்று (அக்டோபர் 3) அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அரசு பார்வையாளர் வடிவேல் மீது புகார் அளித்தனர். அதற்கு அவர், குள்ளம்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு பிரச்னை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும், அடுத்தமுறை கிராமசபைக் கூட்டத்தை முறையாக நடத்தப்படும் என்றும் சமாதானம் செய்தார்.
 

சார்ந்த செய்திகள்