18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக பூரி, இனிப்பு ஆகிய வகையில் சுடச் சுட தயாராகி வருகின்றன. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் கிலோ கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு முறையிட்டுள்ளார்.
வேலூரில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பச்சை துண்டு அணிந்து கொண்டு அதிமுகவினர் உள்ளே சென்றுள்ளனர். ஏற்கனவே அதிமுக இரண்டாக பிளவு பட்டிருக்கும் சூழலில் அமமுக, அதிமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு என மூவருமே ஒரே கரைவேட்டி கட்டியதால் குழப்பம் நிலவியது. இதனால் வித்தியாசத்தை அடையாளப்படுத்திக் கொள்ள அதிமுகவினர் பச்சை துண்டு அணிந்து கொண்டு வேலூரில் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்றுள்ளனர்.