“கொடுத்த வாக்குறுதியை மீறுவதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட காலம் இது! சராசரி மனிதர்கள் இதுபோல் நடந்துகொள்ளலாம் சுவாமிகள் இப்படி பண்ணலாமா?” ராஜபாளையம் - சைவ வேளாளர் சங்கத்தினரின் குமுறல் இது! மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் அம்பலவாண தேசிக பண்டார சன்னிதிகள் என்பவரைத்தான் இவர்கள் சுவாமிகள் என்று குறிப்பிடுகின்றனர்.
அது என்ன வாக்கு மீறல்?
திருக்கயிலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனம் என்பது தென்னிந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டம் - திருவாலங்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஆதீன மடம். இதன் 23-வது குருமகாசன்னிதானமாக விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். இவர் உயிருடன் இருந்தபோது ராஜபாளையம் சைவ வேளாளர் சங்கத்தினர் ஒரு கோரிக்கை வைத்தனர்.
ராஜபாளையம் அருகிலுள்ள மடத்துப்பட்டியில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் 40 ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இங்கு நூலகம் கட்டுவதற்கு சிவப்பிரகாச சுவாமிகளிடம் அனுமதி கேட்டனர். இச்சங்கத்தினரிடம் அவர், நிலத்தை சட்டப்படி மீட்டுத் தாருங்கள். நூலகம் கட்டுவதற்கு அனுமதி தருகிறேன் என்றிருக்கிறார். சங்கமும் முயற்சி எடுத்து ரூ.20 லட்சம் வரை செலவழித்து சட்ட பிரகாரம் அந்த நிலத்தை மீட்டது. இந்த நேரத்தில் சிவப்பிரகாச சுவாமிகள் இறந்துவிட 24-வது குருமகாசன்னிதானமாக அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் பொறுப்புக்கு வந்தார். இவரிடம் நூலகம் கட்டுவதற்கு சங்கம் அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். அதனால் ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சைவ வேளாளர் சமுதாய தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை. வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்பலவாணருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அவர் ஆஜராகத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருநள்ளாறு, ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர், காசி, காளஹஸ்தி உட்பட 50 ஊர்களில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு கிளை மடங்கள் உள்ளன. அம்பலவாண சுவாமிகளுக்கே பிடிவாரண்டா? என்று ஆதீன வட்டாரத்தினர் அதிர்ந்துபோய் உள்ளனர். மனிதனோ, மடாதிபதியோ, சட்டம் பொதுவானது அல்லவா?