Skip to main content

முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் பிரேத பரிசோதனை நிறைவு

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
karthik

 

மதுரையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ரவுடிகளின் உடலுக்கு வாடிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி  விக்னேஷ்மது முன்னிலையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது.  இதையடுத்து முத்து இருளாண்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

மதுரை காமராஜர்புரம் பகுதியில் அதிமுக பிரமுகர் ராஜபாண்டிக்கும், திமுக பிரமுகர் வி.கே. குருசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருதரப்பிலும் அடுத்தடுத்து படுகொலைகள் நடந்தன.  இக்கொலை வழக்குகளில் தொடர்புடைய மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி என்ற மந்திரி (வயது30), சகுனி கார்த்திக் (வயது 28) ஆகிய 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தனர்.

 

இந்நிலையில், முத்துஇருளாண்டியும், சகுனி கார்த்தியும்  அலங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக மதுரை நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செல்போன் டவர் மூலம் ரவுடிகள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தபோது அவர்கள் 2 பேரும் மதுரையை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

 

சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெற்கு தெருவில் உள்ள மாயக்கண்ணன் (வயது25) என்பவரது வீட்டில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரும் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட்டதால், போலீஸ்காரர் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டது.

 

உடனே, பாதுகாப்பு கருதி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் திருப்பி சுட்டதில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் 2 பேரும் அதே இடத்தில்  பலியானார்கள்.
 

சார்ந்த செய்திகள்