ஜனவரி 31ந் தேதி சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலைக்கு குடும்பத்துடன் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பிப்ரவரி 1ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு சித்தூர், வேலூர், வாணியம்பாடி வழியாக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்றார்.
![No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd](http://image.nakkheeran.in/cdn/farfuture/3uYL3fP1S8trxzmQcpIcEsslvyCSo0UFYIrRTQGr2qY/1580556690/sites/default/files/inline-images/IMG-20200201-WA0020.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்போது அமைச்சர் நிலோபர்கபில் வரவேற்பு தர ஏற்பாடு செய்திருந்தார். மதியம் 11.30 மணியளவில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியில் நின்றுயிருந்தபோது, கட்சியினர் ஆயிரம் பேருக்குள்ளே முதல்வரை வரவேற்க வந்திருந்தனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியான அமைச்சர் நிலோபர் தன்னுடன் இருந்த கட்சியினரை திட்டினார். தற்போது உடனடியாக கூட்டத்தை சேர்க்க முடியாதே என தவித்தவர், திடீரென தன் பாதுகாவலர், உதவியாளருடன் ஓட்டமும் நடையுமாக நடக்க தொடங்கினார்.
![No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd](http://image.nakkheeran.in/cdn/farfuture/YAvvhLbIC4r1yZOnRTzPkZjU2hAfhq2t6Oq-HnU6dts/1580556713/sites/default/files/inline-images/IMG-20200201-WA0035.jpg)
வரவேற்பு வழங்கப்படும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இஸ்லாமிய மகளிர் கல்லூரி உள்ளது. அங்குதான் ஓட்டமும் நடையுமாக சென்றார். கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரிக்கு வந்த அமைச்சரை பார்த்து ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். முதல்வர் வரவேற்புக்கு மாணவிகளை அனுப்ப வேண்டும் என வேண்டுக்கோள் போல் உத்தரவாக கேட்டுக்கொண்டார். அமைச்சரை பகைத்துக்கொள்ள முடியாது என்பதால் கல்லூரி நிர்வாகம் சரியெனச்சொல்லி தமிழக முதல்வரை வரவேற்க மாணவிகள் சென்று வரவேண்டும் எனச்சொல்லியுள்ளனர். அதனை தொடர்ந்து 500 மாணவிகளுடன் வரவேற்பு இடத்துக்கு அழைத்து வந்த அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை அழைத்து வந்து, அவர்களை சாலையின் ஓரம் நிறுத்தினார்.
![No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd](http://image.nakkheeran.in/cdn/farfuture/JiSFSpMxpDeGdYBcPd8hIR72LcGW9V9VHqEH9IxMVJ4/1580556737/sites/default/files/inline-images/IMG-20200201-WA0032.jpg)
சிறிது நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரில் வந்தார். முதல்வருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் கட்சியினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு முதல்வர் கையசைத்து, அவர்களை நோக்கி கும்பிட்டார்.
![No crowd to welcome chief minister... Minister who ran to the college to raise the crowd](http://image.nakkheeran.in/cdn/farfuture/2-vzsJOTCH6J7lsVojoadXmbK1YZxgRznfKghuFx9tY/1580556763/sites/default/files/inline-images/IMG-20200201-WA0029.jpg)
அதேநேரத்தில், முதல்வரிடம், வாணியம்பாடியை சேர்ந்த தன்ஜீமெ மஸாஜித் ஆஹ்லே சுன்னத் வல் ஜமாத் (TANZEEM -E-MASAJID AHLE SUNNATH WAL JAMATH) அமைப்பின் சார்பில் குடியுரிமை அரசியலமைப்புச் சட்டம் திரும்பப் பெறக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் சரியென புறப்பட்டு சென்றார்.