கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஆதரவுடன் பா.ம.கவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக் குழு தலைவராகவும், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜான்சி மேரி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒன்றியக் குழு தலைவர் செல்வி ஆடியபாதம், துணைத்தலைவர் ஜான்சி மேரி ஆகியோர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடந்த மாதம் தி.மு.க கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில் 13 கவுன்சிலர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் கடந்த 7ஆம் தேதி நடந்த சிறப்பு கூட்டத்தில் தி.மு.க தரப்பில் 13 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒன்றியக் குழு தலைவர்க்கு எதிராக 13 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இருப்பினும் ஒன்றியக் குழு தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி(212/13) தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். அதன்படி நல்லூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால், 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். மேற்படி கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் உள்பட 8 உறுப்பினர்கள் வரவில்லை.
மேற்படி தீர்மானம் குறித்த பதிவுகள் கூட்ட புத்தகத்தில் பதிவு செய்து உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டு உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தீர்மானமானது மேற்சொன்னவாறு பெரும்பான்மை வாயிலாக நிறைவேற்றப்படவில்லை என்பதால் தற்போதைய ஒன்றியக் குழு தொடர்ந்து செயல்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.கவினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் தோல்வி அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.