கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 07-ஆம் தேதி இரண்டாவது அணு மின் நிலைய பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 6-வது அலகில் பாய்லர் வெடித்தது. இதில் அப்பகுதியில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளி கடந்த 08-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கிய நாயினார்குப்பம் சண்முகம் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒப்பந்த தொழிலாளரான சண்முகம் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மற்றும் தி.மு.க, பா.ம.க மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதையடுத்து என்.எல்.சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்த குடும்பத்திற்கு போதிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று காலை 6 மணிக்கு ஷிப்ட் வேலைக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோர்சர்வ் தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் நெய்வேலி பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. தி.மு.க, சி.ஐ.டி.யு., பா.ம.க., தொழிற்சங்கம் மற்றும் கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் சண்முகத்தின் தாயாருக்கு வைப்பு நிதி மூலம் மாதந்தோறும் 9000 ரூபாய் பென்ஷன் வழங்கவும் உடன்படிக்கை ஏற்பட்டது. அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.