கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு சொந்தமான முதலாவது சுரங்கத்திலிருந்து, அனல் மின் நிலைய சேமிப்பு கிடங்குக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எனப்படும் இழுவை இயந்திரம் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் கரும் புகை வானுயுரத்தில் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் நெய்வேலி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடுமையான போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். திடீர் தீ விபத்தால் சுரங்கத்திலிருந்து நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் மட்டும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும், ஆபத்துகள் ஏற்படவில்லை என்று என்எல்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இத்தீவிபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.