கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு MSS என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் 42 பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தபட்டனர்.
இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகம், MSS நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாக கூறி, அந்நிறுவனத்தின் மூலம் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வந்த பாதுகாப்பு ஊழியர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக் குறியாகி விடும் என்றும், தங்களுக்கு மீண்டும் பாதுகாப்பு ஊழியர்களாக பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலகத்தை நேற்று காலை (27/09/2022) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் என்.எல்.சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், செக்யூரிட்டி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால், இரண்டாவது நாளாக பாதுகாப்பு தலைமை அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் தங்களுக்கு செக்யூரிட்டி பணி வழங்கும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.