வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், புதுச்சேரி வழியாகக் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சி துறை, மின்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அந்தந்த அமைச்சர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வழிமுறைகளை வழங்கினார்கள். இந்நிலையில், இந்தப் புயல் காரணமாக, நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பின்பு முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.