ஏழு மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை இன்று (26/11/2020) நண்பகல் முதல் மீண்டும் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 24- ஆம் தேதி மதியம் 01.00 மணி முதல் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல் 25/11/2020 அன்று இரவு 11.00 மணியளவில் மரக்காணம்- புதுச்சேரி இடையில் கரையைக் கடந்து விட்டதால், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று (26/11/2020) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (26/11/2020) மதியம் 12.00 மணி முதல் விடுமுறைக் கால அட்டவணைப்படி, மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.