
நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’2018 மார்ச் மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடமும் இதுகுறித்துத் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளளார். அவரது கூற்று தமிழ்நாட்டு மக்களை கொதிப்படையச் செய்வது மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தையும் அவமதிப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசு கடந்த வாரத்தில் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் திருமதி.தமிழசை அவர்கள் விரைவில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தற்போது அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதைப் பார்க்கும் போது தமிழிசை கூறியது அனைத்துக் கட்சிகளையும் ஏமாற்றுவதற்காகத் திட்டமிட்டு சொல்லப்பட்ட பச்சைப் பொய் என்பது புரிகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவலைக் கூறிய திருமதி.தமிழிசை அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
அனைத்துக் கட்சிக்கூட்ட முடிவுகளை விரைந்து நடைமுறைப்படுத்திட தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். காவிரி பிரச்ச்னையில் தற்போது உருவாகியுள்ள ஒற்றுமை தொடர்வது தமிழக முதல்வரின் நடவடிக்கையில் தான் உள்ளது என்பதை சுட்டிக்கட்டுகிறோம்.’’