மதுரை ஆதீனம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மதுரை ஆதீனம் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதியான அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 293வது ஆதீனமாக தன்னை குறிப்பிட்டு நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்று இரவு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முடிசூட்டி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் சென்று நித்தியை இளைய ஆதீனமாக அறிவித்ததை ரத்து செய்த நிலையில், நேற்று நித்யானந்தா, நான்தான் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனம் எனவும், மதுரை ஆதீனத்தில் எனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும், அருணகிரிநாதர் மறைவுக்குப் பின்னர் நான் தான் என முகநூல் வாயிலாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரை ஆதினம் பயன்படுத்தி வந்த அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.