Skip to main content

’நக்கீரன் மீதான இந்த வழக்கு சுதந்திர இந்தியாவில் முதல் வழக்கு’- உயர்நீதிமன்றம்

Published on 04/06/2019 | Edited on 04/06/2019


 
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர்  உள்ளிட்ட 5பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விடித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

n

 

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் ஆசிரியர், மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வரும் 10ம் தேதி நேரில் ஆஜராக நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக்கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நக்கீரன் ஆசிரியர் உள்பட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்ற சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய - மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எழும்பூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனவும், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் நக்கீரன் ஆசிரியர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து , விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்