நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. பழமையான சிறப்பு மிக்க பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் மேல் மின்கம்பிகள் செல்கிறது. சுமார் 18 வருடங்களாக பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகம், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆபத்தை உணர்ந்து, அந்த மின்கம்பிகளை அகற்றிக் கொடுங்கள் என்று மின்வாரியம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை புகார் மனுக்களை கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 28- ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். அதற்கும் எந்த நடவடிக்கை இல்லை. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மறுபடியும் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு வந்த மின்வாரிய அதிகாரிகள் பள்ளிக்கு அருகில் இருந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். பள்ளியிலிருந்து ரூ. 4500 செலவு செய்து மரங்களை வெட்டி அகற்றிக் கொடுத்து மாதம் கடந்துவிட்டது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் வரவில்லை.
அதனால் ஏற்பட்ட விளைவு, ஒரு மாணவனின் உயிரை குடித்துவிட்டார்கள், அலட்சியம் காட்டிய அதிகாரிகள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை மேல் அட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வடிவேல் மகன் ஹரிஹரன் (8 வயது). புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3- ஆம் வகுப்பு படிக்கிறான். வழக்கம் போல் 10- ஆம் தேதி பள்ளிக்கு சென்றான். ஓணம் பண்டிகைக்காக மதியம் விடுமுறை விடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
ஆனால் ஹரிஹரன் பல நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்து கிடந்த கிரிக்கெட் பந்தை எடுக்க நினைத்து, படிகள் இல்லாத கட்டிடத்தின் மேல் சுற்றுச்சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறி பாசிபடிந்த மேல்தளத்தில் பந்தை எடுத்த போது, பாசிபடிந்த தரை வழுக்கி கீழே விழப் போவதை அறிந்து அருகில் சென்ற மின்கம்பிளை பிடித்துக் கொண்டான். மின்சாரம் சென்ற அந்த மின்கம்பிகளில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட மாணவன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
அலட்சியமாக இருந்து ஒரு மாணவனின் உயிரைக் குடித்த அதிகாரிகள் வேகமாக வந்து பள்ளியின் கட்டிடத்தை பார்த்தனர். தங்கள் மேல் தவறு இல்லை என்பதை காட்டிக் கொள்ள, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கனிவாக பேசி இவ்வளவு நாளா கம்பி இப்படி போறதை சொல்லக் கூடாது என்று எதையும் தெரியாதது போல அதிகாரிகள் பேசியதை மக்கள் வெறுப்பாக பார்த்தனர். பழைய மனுக்களின் நகல் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றனர். இது குறித்து பந்தலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறும் போது, மின்கம்பிகள் அமைந்துள்ள இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்த பொறியாளர் உள்பட அதிகாரிகள், அதன் பிறகும் மாற்றி அமைக்காத மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், மின்வாரியம் உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளும் இந்த மாணவனின் இறப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பதற்காக ஏழைகளின் உயிரை குடிக்களாமா இந்த அதிகாரிகள்.
அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் தான் இந்த கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிகமாக 6 அரசு பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று காரணம் காட்டி பூட்டி இருக்கிறார்கள். அதிகாரிகள் சரியாக செயல்பட்டிருந்தால் எந்த பள்ளியையும் மூடியிருக்க வேண்டியதில்லை. அரசு பள்ளிகள் என்றால் ஏன் அரசாங்க சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அலட்சியம் காட்ட வேண்டும் என்றனர் .
மேலும் மாவட்ட ஆட்சியர் அவர் பெற்ற மனுவுக்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்பதையும் சொல்ல வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டும் அலட்சியமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்தால் உயிரைப் பறித்த மாணவன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை இழப்பீடும், அந்த குடும்பத்திற்கு அரசு வேலை ஒன்றும் வழங்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் என்ன சொல்லப்போகிறார்களோ, இனிமேலாவது ஏழை மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அலட்சியம் காட்டுவதை தவிர்க்கலாம்.