தமிழ்நாட்டில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதன் வீச்சு படிப்படியாகக் குறைந்துவருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 600 முதல் 650 என்ற அளவில் இருந்து வருகிறது. இந்த அளவும் விரைவாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசியைப் போர்க்கால அடிப்படையில் செலுத்தும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புதிய திருப்பமாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா வைரஸ் தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த தொற்று இதுவரை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதியோடு ஊரடங்கு நிறைவடைய உள்ளதால் அன்று காலை தமிழக முதல்வர் தலைமையில் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும், அதில் தேவை ஏற்பட்டால் இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியனும் செய்தியாளர் சந்திப்பில் தேவை ஏற்பட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.