இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். போருக்கு பிறகு வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். அப்படித் தஞ்சமடைந்தவர்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுடன் ரகசியமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சிதறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்று சேர முயற்சிப்பதாக இந்திய உளவுப் பிரிவான “ரா” (RESEARCH ANALYSING WING ‘RAW’) அமைப்பிற்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.
இது தொடர்பாக தமிழகத்திலுள்ள இதன் வழக்குகள் காவல் துறையிலிருந்து மத்திய அரசின் யூனிட்டான தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (NIA) மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில் விடுதலைப் புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டத்தை நடத்த முயன்றது தெரிய வந்திருக்கிறது. இதன் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து நிதி மற்றும் பிற உதவிகள் பெற்றதாகவும் இதற்கான பின்னணியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருப்பதாக சேலத்தில் பிடிபட்டவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனராம்.
இதனடிப்படையில் சட்ட விரோதமாக வெளிநாடுகளிலிருந்து தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பிடமிருந்து நிதி உதவி பெற்ற நபர்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 50 இடங்களில் பிப் 2 அன்று அதிகாலை ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டத்தின் சிவகிரி அருகிலுள்ள ராயகிரியின் விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்தவர் இசை மதிவாணன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில கொள்கை பரப்பு செயலாளர், மாநில பேச்சாளர், கட்சியின் யூடியுப் பேச்சாளர் என்று பல பொறுப்புகளிலிருப்பவர். இவரது வீட்டிற்கு பிப் 2 அன்று அதிகாலை 6 மணிக்கு என்.ஐ.ஏ.வின் இன்ஸ்பெக்டர் சிபின்ராஜ், தலைமையில் எஸ்.ஐ.க்களான தங்கராஜ், பீமுடு உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாய் வந்தவர்கள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். சோதனையில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதற்குள் தகவல் போய் பரபரப்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரளத் தொடங்கினர். மேலும் மாவட்டத்தின் செங்கோட்டை மற்றும் கடையம் நகரங்களிலுள்ள வங்கியின் முக்கியமான இரண்டு அத்தாட்சிகளோடு வந்த என்.ஐ.ஏ.வினர் அதன் பணப் பரிவர்த்தனை பற்றியும் இசை மதிவாணனிடம் ரகசிய அறையில் வைத்து விசாரித்திருக்கிறார்கள். தொடர்ந்து மதிவாணனின் குடும்பத்தார்களிடமும் விசாரணை நடத்தியவர்கள், பின்னர் பஜாரிலுள்ள அவரது ஸ்டூடியோவிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
காவை 6 மணி தொடங்கி 11 மணி வரை நீடித்த இந்த சோதனைக்குப் பின்பு மதிவாணனின் மூன்று செல்போன்கள், இரண்டு சிம்கார்டுகள், ஆதார்கார்டு மற்றும் பான்கார்டு ஜெராக்ஸ்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கிக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், வருகிற 7ம் தேதியன்று சென்னையிலுள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென இசைமதிவாணனிடம் சம்மன் கொடுத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள்.
சோதனை குறித்துப் பேசிய இசை மதிவாணன், என்.ஐ.ஏ. அடையாள அட்டைகளுடன் வந்த அதிகாரிகள், சம்மனுடன் சோதனைக்கு வந்தனர். அரசியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணை என்று சொன்னார்கள். 7ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சொன்னவர்கள் சிலவற்றை விசாரித்தபோது செல்லிலிருந்த விபரத்தை அவர்களுக்கு தெரிவித்தேன். மூன்று செல்போன்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதை நான் அரசியல் நகர்வாகத்தான் பார்க்கிறேன் என்றார். வங்கி அத்தாட்சிகளோடு என்.ஐ.ஏ.வின் விசாரணை நடந்ததால் சிக்கலிலிருக்கிறது நாம் தமிழர்கட்சி.